சூரியனை விட 160 மில்லியன் மடங்கு திணிவு கொண்டதும், கண்களுக்கு புலப்படாததும், தற்போது ஓடி ஒழிய நினைப்பதும் எது?
புதிதாகக்க் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்திணிவுக் கருந்துளை ஒன்று!
பெரும்திணிவுக் கருந்துளை என்பது அதனது பெயர் சொலவது போலவே மிக மிகத் திணிவுகொண்ட கருந்துளைகளாகும். இவை சூரியனைப் போல பில்லியன் மடங்கு திணிவைக்கூட கொண்டிருக்கும். எண்ணிப்பார்க்க முடியாதளவுக்கு சக்தியைக் கொண்டிருக்கும் இந்தக் கருந்துளைகள் அருகில் இருப்பவற்றை கபளீகரம் செய்வதிலும் வல்லவை. விண்மீன்கள், கோள்கள் மற்றும் ஒளியைக்கூட இவை விட்டுவைப்பதில்லை.
விண்மீன்களுக்கு இடையில் சாதாரண அளவுகொண்ட கருந்துளைகளை அவதானிக்கக்கூடியவாறு இருப்பினும், பெரும்திணிவுக் கருந்துளைகள் பொதுவாக விண்மீன் பேரடைகளின் மையத்திலேயே காணப்படும். இதனால்த்தான் விண்மீன் பேரடையின் மையத்தைவிட்டு ஓடிச்செல்லும் பெரும்திணிவுக் கருந்துளையை தற்போது கண்டறிந்த விண்ணியலாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
இந்த பெரும்திணிவுக் கருந்துளை செல்லும் பாதையை வைத்துக்கொண்டு விண்ணியலாளர்கள் இந்த கருந்துளை விண்மீன் பேரடையை விட்டுச் செல்வதற்காக காரணம் என்ன என்று கண்டறிந்துள்ளனர். மில்லியன் கணக்கான வருடங்களுக்கு முன்னர், இந்தக் கருந்துளை இருக்கும் விண்மீன் பேரடை அருகில் உள்ள இன்னொரு பேரடையுடன் மோதியுள்ளது.மோதலின் பின்னர் இந்த இரண்டு விண்மீன் பேரடைகளிலும் இருந்த விண்மீன்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய விண்மீன் பேரடையை உருவாக்கியுள்ளது. அவ்வேளையில் இரண்டு விண்மீன் பேரடையிலும் இருந்த இரண்டு பெரும்திணிவுக் கருந்துளைகள் புதிதாக உருவாகிய விண்மீன் பேரடைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஆனால் ஒரு விண்மீன் பேரடை இரண்டு பெரும்திணிவுக் கருந்துளைகளுக்கு போதாது. இரண்டு கருந்துளைகளினதும் அதிவீரியமான ஈர்ப்புசக்தி இரண்டு கருந்துளைகளையும் ஒன்றை ஒன்று நோக்கி கவர்ந்து ஒரு கட்டத்தில் இரண்டும் ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து ஒரே கருந்துளையாக மாறிவிட்டது. இந்த மிகச்சக்திவாய்ந்த மோதல் மூலம் உருவான ஈர்ப்பு அலைகள் (gravitational waves) இந்தப் பிரபஞ்சம் முழுதும் பரவியது.
இந்த ஈர்ப்பு அலைகள் பரவிய திசைகளில் ஒரு பக்கம் மட்டும் வீரியமாக அலைகள் வெளிப்பட்டிருந்தால், இந்தக் கருந்துளைகள் அந்த அலைகள் சென்ற திசைக்கு எதிர்த்திசைக்கு தள்ளப்பட்டிருக்கலாம். இது பின்னுதைப்பு (recoil) எனப்படுகிறது. ரொக்கெட் ஒன்று செலுத்தப்படும் போது இதனை நாம் பார்க்கலாம்: ராக்கெட்டின் பின்புறத்தில் உள்ள எஞ்சின் துவாரங்களில் இருந்து வெளிவரும் வாயுக்கள் பூமியை நோக்கி தள்ள, ராக்கெட் அதற்கு எதிர்த் திசையில் மேலெழும்பும்.
இதுதான் இந்தப் பெரும்திணிவுக் கருந்துளையையும் அந்த விண்மீன் பேரடையின் மையத்தில் இருந்து விலகிச்செல்ல காரணமாக இருந்திருக்கவேண்டும்!
ஆர்வக்குறிப்பு
நமது சூரியத் தொகுதி, பால்வீதியின் மையத்தில் இருந்து 25,000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. பால்வீதியின் மையத்தில் Sagittarius A* எனும் பெரும்திணிவுக் கருந்துளை காணப்படுகிறது.
இந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Chandra X-ray Observatory.
Share: