விண்வெளியில் விஞ்ஞான ஆய்வுகளை நடாத்துவது என்பது இலகுவான காரியமில்லை. சூரியனின் ஒரு பகுதியை மிக நுண்ணுயமாக 150 மில்லியன் கிமீக்கு அப்பால் இருந்து ஆய்வு செய்வதை நினைத்துப்பாருங்கள் – வெறும் ஐந்து நிமிடத்திற்குள் ஆய்வை செய்துமுடித்திடவேண்டும்.
CLASP செயற்திட்டம் எதிர்நோக்கிய பிரச்சினை அதுதான். 2015 இல் விண்ணுக்கு ஏவப்பட்ட உயர் தொழில்நுட்பம் கொண்ட தொலைநோக்கி CLASP. கடந்த வாரத்தில் விஞ்ஞானிகள் இதுவரை அது எடுத்த படங்களை எல்லாம் ஆய்வுசெய்து முடித்துவிட்டனர்.
விண்ணுக்கு ஏவப்பட்டவுடன், ராக்கெட்டில் இருந்து பிரிந்து வெறும் ஐந்து நிமிடங்களுக்குள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 150 கிமீ உயரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவிட்டு பரசூட் மூலம் பத்திரமாக மீண்டும் பூமிக்கு வந்துவிட்டது.
CLASP இன் உதவியுடன் விஞ்ஞானிகள் முதன் முறையாக சூரியனின் மேல் அடுக்கில் இருக்கும் காந்தப்புலத்தை துல்லியமான அளந்துள்ளனர்.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து வரும் ஒரு குறிப்பிட்ட ஒளியலையை CLASP அளந்துள்ளது. இந்த ஒளிஅலை காந்தப்புலத்திற்கு உணர்திறன் கொண்டது. இந்த ஒளி எப்படி மாற்றமடைந்துள்ளது என்று ஆய்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட இடத்தில் உள்ள காந்தப்புலத்தின் அளவு மற்றும் திசை என்பவற்றை ஆய்வாளர்களால் அளக்கமுடியும்.
ஆனால், ஏன் சூரியனின் காந்தப்புலத்தை பற்றி ஆய்வு செய்யவேண்டும்? சூரியனின் மேற்பரப்பு அமைப்புக்களை வடிவமைப்பதில் சூரியனின் காந்தப்புலம் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. மேலும், சூரியனில் இருக்கும் பொருட்கள் சூரியனை விட்டு வெளியே செல்லுவதற்கான பாதையாகவும் இந்த காந்தப்புலம் காணப்படுகிறது. இவற்றில் சில சக்திவாய்ந்த சூரியக் கதிர்ப்பாக (solar flare) பூமியை நோக்கி வரலாம், இவை பூமியைச் சுற்றிவரும் செய்மதிகளையும், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் விண்வெளி வீரர்களையும் பாதிக்கும்.
ஆகவே, இதனைப் பற்றி தெளிவாக ஆய்வு செய்து விளங்கிக்கொள்வது, எதிர்காலத்தில் வரும் ஆபத்தில் இருந்து எம்மை பாதுகாக்க உதவும்.
ஆர்வக்குறிப்பு
CLASP ஒரு “sounding rocket” ஆகும். இவை விஞ்ஞான ஆய்வுக் கருவிகளை பூமிக்கு மேலே 50 கிமீ தொடக்கம் 1500 கிமீ வரை கொண்டுசெல்ல பயன்படுகிறது. இவை வானிலை பலூன்களுக்கும் செய்மதிகளுக்கும் இடைப்பட்ட தூரமாகும். காலநிலை பலூன்களுக்கான அதிகூடிய உயரம் 40 கிமீ, செய்மதிகளுக்கான மிகக்குறைந்த உயரம் 120 கிமீ ஆகும்.
Share: