30 ஜூன் 1908 இல் ரஸ்சியாவில் உள்ள ஒரு தூரத்துப் பிரதேசத்தில் நெருப்புப் பந்து ஒன்று காலைவேளை வானில் கடந்தது. ஒரு சில செக்கன்களுக்கு பிறகு, வானில் மிகப்பெரிய வெடிப்பு ஒன்று ஏற்பட்டு, டோக்கியோ நகரத்தின் அளவுகொண்ட காட்டுப்பிரதேசத்தை அழித்தது. இதில் 80 மில்லியன் மரங்கள் தரைமட்டமாகின.
பூமி நடுங்கியது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன, 60 கிமீக்கு அப்பால் இருந்த நகரத்தில் மக்கள் இந்த வெடிப்பின் உக்கிரத்தையும் வெப்பத்தையும் உணர்ந்தனர்.
நல்லவேளையாக இந்த வெடிப்பு நிகழ்ந்த பிரதேசம் மக்கள் யாரும் வாழாத காட்டுப்பகுதியாகும். அதனால் ஒருவரும் இறந்ததாக எந்தத் தகவலும் இல்லை.
இந்த வெடிப்புச் சம்பவம் தற்போது “Tunguska” நிகழ்வு என அழைக்கப்படுகிறது. இது நீலத்திமிங்கிலத்தைப் போன்ற இரு மடங்கு பெரிதான ஒரு சிறுகோள் ஒன்றினால் ஏற்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியின் மேட்பரபிற்கு 10 கிமீ உயரத்தில் வெடித்தது.
109 வருடங்களுக்கு முன்னர் இந்த நிகழ்வு இடம்பெற்ற போது எம்மால் இப்படியான நிகழ்வுகளை எதிர்வுகூறும் முறைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் இன்று சிறுகோள்களை கண்டறியவும் அவதானிக்கவும் பல செயற்திட்டங்கள் உள்ளன.
ஒவ்வொரு வருடமும் ஜூன் 30 இல் “Tunguska” நிகழ்வின் ஞாபகார்த்தமாக மக்கள் இத்தினத்தை சர்வதேச சிறுகோள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மக்களுக்கு சிறுகோள்கள் பற்றியும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும் இந்தப் பிரபஞ்ச ஆபத்தில் இருந்து எம்மை எப்படிக் காத்துக்கொள்ளலாம் என்றும் விவாதிக்கின்றனர்.
நீங்களும் பங்குபெறலாம்!
உங்களுக்கு இந்த நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமிருந்தால் அல்லது சிறுகோள்களைப் பற்றி மேலும் அறிய ஆர்வம் இருந்தால், சர்வதேச சிறுகோள் தினத்தில் உலகம் முழுதும் நடைபெறும் சிறுகோள் தின நிகழ்வுகளை asteroidday.org/event-guide/ எனும் தளத்தில் பார்வையிடலாம். அல்லது எமது செயற்திட்டம் ஒன்றில் பார்க்கலாம்.
மேலும் சூரியத் தொகுதியில் சுற்றிவரும் சிறுகோள்களைக் கண்டறிந்து அதன் சுற்றுப்பாதையை வரைபடமிடவும் நீங்கள் Agent NEO மற்றும் Asteroid Tracker மூலம் உதவலாம்.
ஆர்வக்குறிப்பு
Tunguska நிகழ்வைவிட பெரிய சிறுகோள்கள் எமது பூமியில் மோதியுள்ளன. 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் Chicxulub எனும் சிறுகோள் பெரும்பாலான டைனோசர்களை பூமியில் இருந்து அழித்தது.
Share: