பிரபஞ்ச வாயுக்கள் ஒடுங்கும் போது அவற்றின் அடர்த்தியும் வெப்பநிலையும் அதிகரிக்கும். இந்த வாயுத் திரளின் மையத்தின் வெப்பநிலை 10 மில்லியன் பாகையை அடையும் போது புதிய விண்மீனாக இது மாற்றமடையும்.
ஆனால் ஒடுங்கும் எல்லா பிரபஞ்ச வாயுத்திரள்களும் விண்மீன் ஆவதற்கு தேவையான அதியுயர் வெப்பநிலையை அடைவதில்லை. அப்படி அடையாதவை தவறிய விண்மீன்கள் அல்லது, ‘பழுப்புக்குள்ளன்’ என அழைக்கப்படுகிறது.
விண்மீன்களைப் போலவே பழுப்புக் குள்ளனும் வெப்பம் காரணமாக ஒளியை பிறப்பிக்கின்றது. இவை சிவப்பு நிறத்தில் கண்களுக்குத் தெரியாத அகச்சிவப்பு அலைவீச்சில் ஒளிர்கிறது. விண்மீன்களோடு ஒப்பிடும் போது பழுப்புக் குள்ளர்கள் சிறிய, பிரகாசம் குறைந்த மற்றும் குளிர்ச்சியானவை.
இதனால் இவற்றைக் கண்டறிவது மிகக் கடினமாக ஒரு காரியம். இதுவரை எமது விண்மீன் பேரடையில் வெறும் 3,000 பழுப்புக் குள்ளர்களை மட்டுமே கண்டுபிடித்துள்ளோம். ஆனால் மேலும் பல பழுப்புக் குள்ளர்கள் இருளில் மறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
பழுப்புக் குள்ளர்களை தேடும் ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் குழு, ஒவ்வொரு சோடி விண்மீன்களுக்கு ஒரு பழுப்புக் குள்ளன் வீதம் எமக்கு அருகில் உள்ள விண்வெளிப் பிரதேசங்களில் காணப்படுவதை அவதானித்துள்ளனர்.
இந்த வீதத்தில் எமது பால்வீதி முழுதும் பழுப்புக் குள்ளர்கள் காணப்பட்டால் அவற்றின் எண்ணிக்கை 100 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும். 100 பில்லியன் என்பது 100,000,000,000!
இந்த கணக்கெடுப்பு சிறிய மற்றும் மிகவும் பிரகாசம் குறைந்த பழுப்புக் குள்ளர்களை கணக்கில் கொள்ளாது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு. ஆகவே மொத்த பழுப்புக் குள்ளர்களின் எண்ணிக்கை மேலே கூறியதைவிடக் கூடுதலாக இருக்கலாம்!
ஆர்வக்குறிப்பு
பழுப்புக் குள்ளர்கள், வாயு அரக்கர்களுக்கும் (வியாழன், சனி போன்ற கோள்கள்) விண்மீன்களுக்கும் இடைப்பட்டவை. இவை ஒளிர்வதுடன், இவற்றைச் சுற்றி கோள்களும் காணப்படலாம். ஆனால் கோள்களைப் போலவே இவற்றுக்கு வளிமண்டலம், மேகங்கள் மற்றும் இவற்றின் மேற்பரப்பில் புயலும் கூட வீசலாம்.
இந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Royal Astronomical Society.
Share: