Snapchat, Instagram மற்றும் Vine Camera ஆகியவற்றைக் கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் யாவரும் இன்று புகைபப்டக்காரர்கள்தான். ஆனால் இந்தப் புகைப்படம் 1960களில் எடுக்கப்பட்டது. இன்றுவரை மிகப் புகழ்பெற்றதும், திகைப்பூட்டக்கூடியதுமான ஒரு புகைப்படம் இது.
நிலவின் அடிவானத்தில் இருந்து பூமி உதிப்பதைக் காட்டும் இந்தப் புகைப்படத்தை ஆழ்விண்வெளிக்குச் சென்ற முதலாவது விண்வெளி வீரர்கள் எடுத்தனர். உலகெங்கிலும் வாழும் மக்களின் கற்பனையை படம்பிடித்துக் காட்டும் இந்த படம் பூமியும் நாமும் எவ்வளவு சிறியவர்கள் என்பதை பறைசாற்றி நிற்கிறது.
இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் புகைப்படம் எடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்ச்சியில் அதுவும் ஒன்று. அவர்கள், தங்கள் ஓய்வு நேரத்தில் அண்ணளவாக 400 கிமீ உயரத்தில் இருந்து பூமியை புகைப்படம் எடுக்கின்றனர்.
ஆனால் விண்வெளி வீரர்கள் மட்டுமே பூமியைப் பார்க்கும் கண்களைக் கொண்டிருக்கவில்லை. பூமிக்கு மேலே நூற்றுக்கணக்கான கிமீ உயரத்தில் பூமியை வட்டமிடும் செய்மதிகள் விண்வெளி வீரர்களுக்கு முன்பிருந்தே பூமியைப் படம்பிடிக்கிறன.
செய்மதிகள் அதி-திறன் வாய்ந்த கமெராக்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு பூமியில் நிகழும் மாற்றங்களை அவதானிக்கின்றன. இதன்மூலம் இவற்றால் பல முக்கிய செயற்பாடுகளை செய்யக்கூடியவாறு இருக்கின்றது. இவை வளிமண்டல மாசடைவை அளக்கின்றன, அழியும் மழைக்காடுகளையும், உருகிவரும் பனிப்பாறைகளின் அளவையும் அளவிடுகின்றன.
கடந்த மாதத்தில் அமெரிக்காவை தாக்கிய பாரிய சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது, செய்மதிகளும், விண்வெளி வீரர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகின்றனர்.
காலநிலை செய்மதிகள் சூறாவளியின் பாதையை கணக்கிடுகின்றன, இதன்மூலம் மக்களை குறித்த இடங்களில் இருந்து வெளியேற்றவேண்டுமா என அதிகாரிகள் முடிவெடுக்கின்றனர். மேலும், விண்வெளி வீரர்கள் எடுத்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு சூறாவளியின் வீரியத்தை அளக்கக்கூடியவாறு இருக்கின்றது.
எனவே, செய்மதியா அல்லது விண்வெளி வீரர்களா எடுக்கும் புகைப்படங்கள் சிறந்தவை?
இரண்டு வகையான படங்களும் எம்மை வியப்பூட்டினாலும், செய்மதி எடுக்கும் படங்கள் விஞ்ஞான ஆய்வுகளுக்கு மிக முக்கியம், ஆனால் நிறையில்லா நிலையில் விண்வெளியில் மிதக்கும் விண்வெளி வீரர்களின் புகைப்படங்கள் எமது கவனத்தை வெகுவாக ஈர்க்கும்.
பூமிக்கு மேலே வேகு உயரத்தில் இருந்து பார்க்கும் செய்மதிகளுக்கும் விண்வெளி வீரர்களுக்கும் இந்த உலகம் எவ்வளவு சிறியது என்று தெரியும். அவர்களது படங்கள் முடிவில்லா விண்வெளியில் மிதந்துவரும் பூமியில் இருக்கும் நாம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்புடன் வாழவேண்டும் என ஞாபகப் படுத்துகின்றது.
ஆர்வக்குறிப்பு
பூமியில் விழுந்துவிடாதபடி வானில் இருந்துகொண்டே பூமியைச் சுற்றிவர செய்மதிகள் மணிக்கு 28,000 கிமீக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கவேண்டும்.
Share: