1980 களில் வியாழனை நோக்கி பயணித்த கலிலியோ விண்கலம் பூமிக்கு அருகில் வந்தது. இப்படியாக அருகில் பறந்துவந்த கலிலியோவின் சக்திவாய்ந்த கருவிகள் பூமியில் உயிரினங்கள் இருகின்றனவா என்று அறிகுறிகளைத் தேட ஒரு அருமையான சந்தர்பத்தை வழங்கிற்று. இது மூலம் கண்டறியக்கூடிய அறிகுறிகள் வேறு கோள்களில் உயிரனங்கள் இருந்தால் அங்கும் காணப்படும்.
பூமியைப் பார்வையிட்ட கலிலியோ விண்கலம், உயிரினங்கள் இருப்பதற்கான பல்வேறு அறிகுறிகளை கண்டறிந்தது. புல்வெளிகளும் காடுகளும் அதிகளவான புலப்படும் ஒளியை உறிஞ்சின (புலப்படும் ஒளி என்பது நமது கண்களுக்கு தெரியும் ஒளி). இதற்க்கு காரணம் தாவரங்கள் ஒளியை உறுஞ்சி அதனைக் கொண்டு சக்தியை உருவாகுகின்றன.
ஆனால் அகச்சிவப்புக் கதிர்கள் (infrared light) போன்ற கண்களுக்கு புலப்படா ஒளியை தாவரங்கள் உறுஞ்சுவதில்லை. இதற்குக் காரணம் பூமியில் முதன்முதலில் தோன்றிய முதலாவது தாவரம் தண்ணீருக்கு அடியில் தோன்றியதாலாகும்.
கடல் நீர் அகச்சிவப்புக் கதிர்களை வேகமாக உறுஞ்சிக்கொள்ளும், ஆனால் கண்களுக்கு புலப்படும் ஒளி சமுத்திரத்தின் ஆழத்திற்குச் செல்லக்கூடியது. ஆகவே இந்த தாவரங்கள் நீருக்கடியில் தங்களை வந்தடையைக்கூடிய ஒளியில் தங்கியிருக்கக்காரணமாயிற்று – இந்தப் பண்பு இன்றுவரை தொடர்கிறது.
விஞ்ஞானிகள் வேற்றுக்கிரகங்களில் இருக்கும் உயிரினங்களை தேடும் பொழுது, சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்களைச் சுற்றிவரும் கிரகங்களிலேயே தேடுகின்றனர், இதற்குக் காரணம் இவ்வகை விண்மீன்களே பிரபஞ்சத்தில் நிறைந்து காணப்படுகின்றது.
சிவப்புக் குள்ளன் வகை விண்மீன்கள் சூரியனைவிடச் சிறியதும், வெப்பம் குறைவானதும் ஆகும். மேலும், அவை வெளியிடும் பெருமளவான ஒளி, அகச்சிவப்பு ஒளியாகும். இதனால், இவ்வகையான விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்களில் இருக்கும் தாவரங்களும், காடுகளும் பூமியில் உள்ள தாவரங்களை விடப் பெருமளவில் அகச்சிவப்புக் கதிர்களை உருஞ்சும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஆனாலும், அக்கோள்களில் இருக்கும் தாவரங்கள் நீருக்கடியில் உருவாகியிருந்தால், அவை அகச்சிவப்பு ஒளியை உருஞ்சும் வாய்ப்பு குறைவே. ஆகவே, வேற்றுக்கோள்களில் இருக்கும் தாவரங்கள் பூமியில் உள்ள தாவரங்களைப் போல நீருக்கடியில் தோன்றியிருந்தால் அவையும் பூமியில் உள்ள தாவரங்கள் போலவே இருப்பதற்காக வாய்ப்புக்கள் அதிகம்!
ஆர்வக்குறிப்பு
பூமியில் முதலாவது தாவரம் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தது. இன்று பூமியில் 400,000 இற்கும் அதிகமான வேறுபட்ட தாவரவகைகள் பரிணாமம் அடைந்துள்ளன. கடுகளவில் இருந்து பாரிய கட்டடத்தைவிடப் பெரியளவுகளில் இன்று தாவரங்கள் உண்டு. இவை பூமியில் இருக்கும் மற்றைய உயிரினங்களை விடப்பெரியவை.
Share: