இந்தப் பிரபஞ்சத்தில் உயிர் என்று சொன்னாலே அது ஏலியன்ஸ் என்று கருதத் தேவையில்லை – அது நாமாகக் கூட இருக்கலாம்.
இதுவரை எந்தவொரு வேற்றுலகவாசிகளும் பூமிக்கு வந்ததில்லை, அதேவேளை நாமும் இந்தப் பிரபஞ்சத்தில் பயணித்ததில்லை. நாமிருக்கும் சூரியத் தொகுதியைத் தாண்டி விண்வெளியில் ஒரு நாள் நாம் பயணிப்போமா?
அப்படியாக நாம் பயணித்தால், எமக்கு மிக அருகில் இருக்கும் விண்மீனான புரோக்ஸிமா சென்டுரியை நோக்கித்தான் நாம் செல்வோம்.
தற்போது எம்மிடம் இருக்கும் ராக்கெட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் அந்த விண்மீனை அடைய பல மில்லியன் வருடங்கள் ஆகும். ஆனால் தற்போது Starshot எனும் ஒரு புதிய திட்டம் இந்தக் காலகட்டத்தை வெறும் 20 வருடங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது.
மிகச் சக்திவாய்ந்த லேசர்களைக் கொண்டு நுண்ணிய விண்கலங்களை செக்கனுக்கு 60,000 கிமீ வேகத்தில் புரோக்ஸிமா செண்டுரியை நோக்கி அனுப்ப முடியும். இந்த வேகத்தின் இங்கிருந்து நிலவை அடைய வெறும் 7 செக்கன்களே எடுக்கும்.
இந்தப் புரோக்ஸிமா சென்டுரி விண்மீனுக்கு செல்வது பயனுள்ள விடையமா?
எமக்குக் கிடைக்கும் புதிய தொலைநோக்கி படங்கள் மூலம் இந்த விண்மீனைச் சுற்றியுள்ள பகுதிகள் மேலும் மேலும் சுவாரஸ்யமாகத் தெரிகின்றன. கடந்த வருடத்தில் பூமி போன்ற பாறைக் கோள் ஒன்று இந்த விண்மீனைச் சுற்றிவருவது கண்டறியப்பட்டது. அண்மையில் இந்த விண்மீனைச் சுற்றி சிறிய பாறைகள் மற்றும் பனியால் உருவான பல பட்டிகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த வளையங்கள் “dust belts” எனப்படுகின்றன.
இந்தத் தூசுப் பட்டிகள் எமக்கு பழக்கமான ஒரு விடையமாகவே இருக்கிக்றது. , எமது சூரியத் தொகுதியிலும் சிறுகோள் பட்டி, மற்றும் கைப்பர் பட்டி ஆகிய சிறு பாறைகள், பனியால் உருவான பட்டிகள் காணப்படுகின்றன. இந்தப் பட்டிகள் சூரியத் தொகுதியல் எஞ்சிய வஸ்துக்களால் ஆனவை, இந்த வஸ்துக்கள் ஒன்று சேர்ந்து கோள்கள் அல்லது துணைக்கோள்கள் போன்ற பாரிய பொருட்களாக உருமாற்றமடையவில்லை.
புரொக்சிமா செண்டுரியில் நாம் ஒரே ஒரு கோளை மட்டுமே கண்டரிந்திருந்தாலும், இந்தப் பட்டிகள் புரோக்ஸிமா சென்டுரியில் ஒரு கோளையும் தாண்டி பல விடையங்கள் இருக்கின்றன என்று எனக்குத் தெரிவிக்கின்றன.
மேலும் இந்தப் பட்டிகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வது Starshot திட்டத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். விண்மீனைச் சுற்றியுள்ள பகுதி எப்படி இருகின்றது என்று தெரிந்துகொள்வது, பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவும்.
ஆர்வக்குறிப்பு
புரோக்ஸிமா சென்டுரியில் உள்ள பட்டிகளில் காணப்படும் பனிப்பாறைகளும் தூசுகளும், எமது சிறுகோள் பட்டி, கைப்பர் பட்டி ஆகியவற்றில் உள்ள பனிபாறைகள் மற்றும் தூசுகளைப் போலவே காணப்படுகின்றன. அங்கே மண் துணிக்கை அளவில் இருந்து சில கிமீ குறுக்களவு கொண்ட பாறைகள் வரை காணப்படுகின்றன.
Share: