ரேடியோ ஒலியை அதிகரிக்க விண்ணியலாளர்கள் ஒரு புதிய முறையைக் கண்டுபிடித்துவிட்டனர். ரேடியோவின் வால்யும் பட்டனை திருகுவதல்ல, பெரும் திணிவுக் கருந்துளையைத் திருகுவதுதான் அந்த முறை!
நாம் ரெடியோவில் கேட்கும் பாடல்கள் ரேடியோவின் ஸ்பீக்கரில் இருந்து எமது காதுகளுக்கு வரும் ஒலியலைகள். ஆனால் ரேடியோவிற்கு அவை “ரேடியோ அலைகள்” வடிவில் வந்தடைகின்றன. ரேடியோ அலைகள் எனப்படுவது நம் கண்களுக்கு புலப்படாத ஒளியாகும். அவை ஒலி அலைகள் அல்ல.
ரேடியோ அலைகள் மூலம் பாடல்கள், படங்கள் மற்றும் தகவல்களை எம்மால் அனுப்பமுடியும். இந்த முறையில் அனுப்பப்படும் தகவல்கள் எம்மைச் சுற்றி பல்லாயிரக்கணக்கான வடிவங்களில் தினம் தினம் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. உங்கள் மொபைல் போன், Wi-Fi ஹாட்ஸ்போட்ஸ், மற்றும் பல வயர்லஸ் தொழில்நுட்பங்கள்ரேடியோ அலைகளைப் பயன்படுத்தியே தொடர்பாடுகின்றன.
ரேடியோ அலைகள் விண்வெளியில் இருந்தும் பூமிக்கு வருகின்றது. கோள்கள், விண்மீன்கள், விண்மீன் பேரடைகள் என்பனவும் ரேடியோ அலைகளை வெளியிடுகின்றன. இதிலும் மிக வீரியமாக ரேடியோ அலைகளை வெளியிடுபவை பெரும் திணிவுக் கருந்துளைகள் (supermassive black holes) ஆகும்.
மேலே உள்ள ஓவியர் வரைந்த படத்தில் உள்ள கருந்துளை அதனைச் சுற்றியுள்ள வஸ்துக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது. கருந்துளையினுள் விழுந்து பூரணமாக மறையும் முன்னர் இந்த வஸ்துக்கள் கருந்துளையைச் சுற்றி மிகவேகமாக வலம்வருகின்றன. இப்படியாக மிக வேகமாக சுற்றிவரும் வஸ்துக்கள் கணக்கிடமுடியா அளவு ரேடியோ அலைகளை விண்வெளியை நோக்கி வெளியிடுகின்றன.
ஆனால் எல்லா பெரும் திணிவுக் கருந்துளைகளும் ஒரே அளவான ரேடியோ அலைகளை வெளியிடுவதில்லை. இதற்கான காரணம் ஒரு புரியாத புதிராகவே பலகாலமாக விண்ணியலாளர்களை குழப்பியது.
அண்மையில் ஒரு விண்ணியலாளர்கள் குழு இதற்கான காரணம் என்ன என்று ஆய்வு செய்தது. பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடுவதும், பிரகாசமாக ரேடியோ அலைகளை வெளியிடாததுமான 8,000 பெரும் திணிவுக் கருந்துளைகளை இவர்கள் உன்னிப்பாக அவதானித்தனர். இதிலிருந்து இவர்கள் இதற்கான விடையைக் கண்டுபிடித்துவிட்டது போல தெரிகிறது – விடை: சுழற்சி.
இந்தப் பிரபஞ்சம் முழுக்க சுழலும் பொருட்களே நிறைந்துள்ளது: நம் பூமி, சூரியன், விண்மீன் பேரடைகள். இதற்கு கருந்துளைகளும் விதிவிலக்கல்ல. புதிய ஆய்வின் விடையைப் பொறுத்தவரையில், எவ்வளவு வேகமாக கருந்துளை சுழல்கிறதோ, அவ்வளவுக்கு அதிகமாக அவற்றிலிருந்து ரேடியோ அலைகள் வெளிவருகின்றன.
ஆர்வக்குறிப்பு
ஏதாவது தடுத்து நிறுத்தாவிடில் ரேடியோ அலைகள் தொடர்ந்து முடிவின்றி பயணித்துக்கொண்டே இருக்கும். சூரியத் தொகுதியைத் தாண்டியும் ரேடியோ அலைகள் பயணித்து ஏலியன் உலகை அடைந்திருக்கலாம். இளையராஜாவின் பாடலை ஏலியன்ஸ் கேட்டால் எப்படி பீல் பண்ணுவார்கள்?
Share: