ஒவ்வொரு நாளும் நமது சூரியன் சூரியத் தொகுதியை நோக்கி மில்லியன் கணக்கான தொன் எடையுள்ள அதி சக்தி வாய்ந்த சூப்பர் ஹாட் துணிக்கைகளை செக்கனுக்கு 500 கிமீ வேகத்தில் (தோட்டாவின் வேகத்தைப் போல 1000 மடங்கு) தெளித்துக்கொண்டே இருக்கிறது!
ஆனாலும் நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. பூமி மற்றும் பல கோள்கள் இந்த துணிக்கைகளிடம் இருந்து கண்களுக்கு புலப்படா கவசம் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. இவை கோள்களை முழுதாக மூடக்கூடிய அளவிற்கு பெரிய கவசங்களாகும்! இவற்றை நாம் காந்தப்புலம் என அழைக்கிறோம்.
பாடாசாலை ஆய்வுகூடத்திலோ அல்லது உங்கள் வீட்டு குளிர்சாதனப்பெட்டிக் கதவிலோ ஒட்டியிருக்கும் காந்தங்களை விட இந்த பாரிய கவசங்கள் ஒன்றும் பெரிதாக வேறுபாடு கொண்டவை அல்ல. ஒரு கோளின் காந்தப் புலம் அதன் ஒரு துருவத்தில் தொடங்கி அடுத்த துருவம் வரை உளுந்துவடை போன்ற ஒரு வடிவில் உருவாகியிருக்கும். இரண்டு துருவங்களிலும் சிறிய துளை காணப்படும்.
இந்த காந்தப்புலத்தின் முக்கிய பணி சூரியனில் இருந்துவரும் சக்திவாய்ந்த துணிக்கைகள் கோளின் வளிமண்டலத்தை துடைத்தெடுத்துச் செல்வதை தடுப்பதும், மற்றும் கோளின் மேற்பரப்பில் ஆபத்தான இந்தத் துணிக்கைகள் தாக்குவதை தடுப்பதும் ஆகும். இந்த காந்தப்புலம் கோளை நோக்கிவரும் துணிக்கைகளை அதன் காந்தப்புல துருவங்களுக்கு அனுப்புகின்றது. அங்கே இருக்கும் காந்தப்புலத் துளை மூலம் இந்த சக்திவாய்ந்த துணிக்கைகள் கோளின் வளிமண்டலத்தினுள் நுழைகின்றன.
பல மில்லியன் கிமீ தூரம் சூரியனில் இருந்து பயணித்து கோளை அடைந்த இந்த துணிக்கைகள் இறுதியில் ஒளிவீச தயாராகிவிடும். பூமியில் துருவங்களில் உருவாகும் துருவஒளி – அரோராக்களுக்கு காரணம் இந்த துணிக்கைகளே.
ஆரோராக்கள் பூமிக்கு மட்டும் தனித்துவமானவை அல்ல. சனி உட்பட சூரியத் தொகுதியில் இருக்கும் வேறு பல கோள்களிலும் நாம் ஆரோராக்களை அவதானித்துள்ளோம்.
படத்தின் சனியின் வடதுருவத்தில் ஒளிரும் ஆரோராவை நீங்கள் பார்க்கலாம். இது ஹபிள் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட புகைப்படம். அரோராவின் நிறம் குறித்த கோளின் வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்களின் அணுக்களில் தங்கியிருக்கும். பூமியில் சூரியனின் துணிக்கைகள் வளிமண்டல ஆக்ஸிஜனுடன் மோதும் போது பச்சை நிற ஒளியும், நைதரசன் அணுக்களுடன் மோதும் போது சிவப்பு நிற ஒளியயையும் உருவாக்கும்.
நமது வளிமண்டல கட்டமைப்பைவிட மாறுபட்ட கட்டமைப்பை சனி கொண்டுள்ளது. சனியின் வளிமண்டலம் பெரும்பாலும் ஐதரசன் வாயுவால் ஆனது. எனவே அங்கே உருவாகும் ஆரோராக்கள் வெறும் கண்களுக்கு புலப்படாதவை. அங்கே ஆரோராக்கள் புறவூதாக்கதிரில் ஒளிர்கின்றன. அதிர்ஷ்டவசமாக ஹபிள் தொலைநோக்கியால் புறவூதாக்கதிர்களை பார்க்கமுடியும். எனவே எமக்காக அது இந்தப் படங்களை எடுத்துள்ளது!
ஆர்வக்குறிப்பு
அண்மையில் விஞ்ஞானிகள் பூமியின் வளிமண்டலத்தில் ஆரோராவுடன் சேர்ந்து உருவாகும் ஒரு புதிய நிகழ்வு ஒன்றை அவதானித்துள்ளனர். இதற்கு STEVE எனப் பெயரிட்டுள்ளனர். இரவு வானில் இது மெல்லிய பெர்பில் மற்றும் வெள்ளைக் கீற்றாக தென்படுகிறது. இதுவரை இதற்கான காரணம் யாருக்கும் தெரியாது. ஆனால் இதற்கான பெயர் Over the Hedge எனும் அனிமேஷன் படத்தில் இருந்து எடுக்கப்பட்டது!
இந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Hubble Space Telescope.
Share: