இந்தப் பிரபஞ்சம் என்பது முடிவில்லாப் பெருங்கடல், இங்கே எமது சூரியன் போன்று பில்லியன் கணக்கில் விண்மீன்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல விண்மீன்களைச் சுற்றி கோள்கள் வலம்வருகின்றன. நாம் அவற்றை பிறவிண்மீன் கோள்கள் என அழைக்கிறோம்.
இதுவரை அண்ணளவாக 3000 இற்கும் அதிகமான பிறவிண்மீன் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக தற்போது புதிதாக கண்டறியப்படும் பிறவிண்மீன் கோள்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடந்த மூன்று மாதத்தில் மட்டுமே 300 இற்கும் மேற்பட்ட பிறவிண்மீன் கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அண்மைக் காலத்தில் பிறவிண்மீன் கோள்களைக் கண்டறிவதில் அதிகளவு வெற்றிக்குக் காரணம் கெப்ளர் தொலைநோக்கிதான். கெப்ளர் 2009 இல் பிறவிண்மீன் கோள்களைத் தேடுவதற்கு என்றே விண்ணுக்கு அனுப்பப்பட்ட தொலைநோக்கி. இது 'ட்ரான்சிட் முறை' மூலம் தொலை தூரக் கோள்களைக் கண்டறிகிறது.
விண்மீன் ஒன்றின் பிரகாசம் குறித்த காலத்தில் குறைந்து அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் என்பதால், கெப்ளர் கொடுக்கும் தரவுகளை மீண்டும் சரிபார்த்து, அது ஒரு பிறவிண்மீன் கோள்தானா என்பதனை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
2013 இல் கெப்ளர் தொலைநோக்கியில் ஏற்பட்ட பழுதின் காரணமாக புதிய திட்டம் ஒன்று பதிலீடாக உருவாக்கப்பட்டது. இதனை K2 என பெயரிட்டனர். K2 எமக்குத் தரும் தரவுகளில் இருந்து பிறவிண்மீன் கோள்களை உறுதிப்படுத்த உலகின் பல நாடுகளில் இருக்கும் விஞ்ஞானிகளும் போட்டியிடுகின்றனர். இதில் பல குழுக்களும் வெற்றிபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
கெப்ளர் தரும் தரவுகளில் இருந்து பிறவிண்மீன் கோள்களை உறுதிப்படுத்த விஞ்ஞானிகள் காயா (Gaia) எனும் வேறொரு தொலைநோக்கியின் தரவுகளை பயன்படுத்துகின்றனர். காயா என்பது பில்லியன் கணக்கான விண்மீன்களை 3Dயில் வரைபடமிடும் ஒரு திட்டமாகும்.
கெப்ளர் தரும் தரவுகளை காயாவின் தரவுகளுடன் கலப்பதன் மூலம் விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக பிறவிண்மீன் கோள்கள் அல்லாத போலித் தரவுகளை இனங்கண்டு அவற்றை நீக்கிவிடமுடியும். இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி 100 இற்கும் அதிகமான கோள்களை இதுவரை உறுதிப்படுத்தியுள்ளோம்.
இதுவரை 104 பிறவிண்மீன் கோள்களை மட்டும் இந்த விஞ்ஞானிகள் கண்டறியவில்லை. அவற்றின் தன்மை பற்றியும் இவர்கள் கண்டறிந்துள்ளனர். சில சிறிய கோள்கள், சில பெரிய கோள்கள், சில பாறைக்கோள்கள், சில வாயு அரக்கர்கள், பல விண்மீன்களைச் சுற்றி ஒன்றுக்கும் மேற்பட்ட கோள்கள் சுற்றிவருவதையும் இவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால், இவற்றுக்கு மேலே, எம்மை மேலும் ஆச்சரியப்படுத்துவது விண்மீனிற்கு மிக அருகில் சுற்றிவரும் கோள்கள் தான். இவை எப்படி உருவாகியிருக்கக்கூடும் என்று இதுவரை எமக்கு சரியாக கூறிவிடமுடியாது இருக்கிறது.
ஆனாலும், ஆய்வு செய்வதற்கு K2 தரவுகள் இன்னும் நிறைய இருகின்றன. அவற்றில் இருக்கும் புதிய பிறவிண்மீன் கோள்கள் எப்படி இப்படியான கோள்கள் உருவாகி வளர்கின்றன என்று எமக்கு விளக்கலாம்.
ஆர்வக்குறிப்பு
ஒரு சிறிய ஊரில் இருக்கும் ஒரு வீட்டின் இரவு விளக்கை அணைக்கும் ஒருவரைக் கூட விண்ணில் இருந்து துல்லியமாக கண்டறியக்கூடியளவிற்கு சக்திவாய்ந்தது இந்த கெப்ளர் தொலைநோக்கி.
Share: