நாம் காலை உணவாக சீரியல், பழங்கள்,ரோஸ்ட் பாண் போன்றவற்றை உட்கொள்வோம். நம்மைப்போலவே இந்தப் பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அரக்கர்கள் கூட அவ்வப்போது சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
கருந்துளைகள் தூசுகள் மற்றும் வாயுக்களை கபளீகரம் செய்யும். அதிலும் பிரபஞ்சத்தின் ஆரம்பக்காலக் கருந்துளைகள் அளவுக்கதிகமாகவே வாயுக்களையும் தூசுகளையும் சாப்பிட்டுள்ளன.
கருந்துளைக்கு அருகில் வரும் அனைத்தையும் அதன் அதிசக்திவாய்ந்த ஈர்ப்பு விசை கொண்டு கருந்துளைகள் இழுத்துவிடும். இப்படி கருந்துளைக்குள் விழும் பருப்பொருட்களே கருந்துளையின் அளவை பெரிதாக்கின்றன.
பிரபஞ்சத்தில் இருக்கும் ஆதிகால விண்மீன் பேரடைகளை சுற்றியிருக்கும் குளிரான வாயுக்களின் திரளை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தப் பேரடைகளின் மையத்தில் இருக்கும் பெரும்திணிவுக் கருந்துளைகளுக்கு உணவாக அமைவதுடன் இந்தப் பேரடைகளும் பெரிதாக உதவுகிறது.
இப்படியான வாயுத்திரள்கள் எப்படி பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் கருந்துளைகள் மிகப்பெரிதாக வளர்ந்தன என்று விளக்குகின்றன.
இந்தக் கருந்துளைகள் பிரபஞ்சத்தின் தொலைவில் இருக்கின்றன. அப்படியென்றால் இவை 12.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வாயுக்களை கபளீகரம் செய்ததையே நாம் தற்போது அவதானிக்கிறோம்.
ஆர்வக்குறிப்பு
கருந்துளைக்கு எதிர்மாறான விண்பொருளை நாம் வெண்துளை என அழைக்கிறோம். வெண்துளைக்குள் ஒளிகூட உள்ளே நுழையமுடியாது. ஆனால் வெண்துளையில் இருந்து பருப்பொருட்கள் தப்பித்து வெளியேறலாம். இயற்கையில் வெண்துளை இருப்பது சாத்தியமற்றது என்று கருதுகிறார்கள். இது பெரும் சிக்கலான கணக்கிற்கான ஒரு விடையின் பகுதியே.
Share: