பெரும்பாலும் சூரியத் தொகுதிக்குள் வரும் விருந்தாளிகள் என்று கேள்விப்படும் போது எமக்கு ஞாபகம் வருவது ஏலியன்ஸ் மற்றும் அவர்களின் விண்கலங்களும் தான். எனவே அண்மையில் இரண்டு விருந்தாளிகள் சூரியத் தொகுதிக்கு வந்துவிட்டு சென்றுள்ளனர் என்று உங்களுக்குத் தெரிந்தால் பெரிதும் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால், வந்தது இரண்டும் தூமகேதுக்கள்; ஏலியன்ஸ் விண்கலங்கள் அல்ல.
தூமகேதுக்கள் அல்லது வால்வெள்ளிகள் என அழைக்கப்படும் விண்பொருட்கள் பனி, தூசு மற்றும் பாறைகளால் உருவானது. இவை சிலவேளைகளில் “அழுக்குப் பனிக்கட்டிகள்” எனவும் அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான தூமகேதுக்கள் சூரியத் தொகுதியின் வெளியெல்லை பிரதேசத்தில் இருந்து வந்து கோள்களை போல சூரியனை வட்டமடிக்கின்றன. ஆனால் இவற்றில் சிலவற்றின் தோற்றம் மர்மம் நிறைந்ததாகவே இருக்கிறது.
ஜப்பானைச் சேர்ந்த விண்ணியலாளர்கள் சூரியத் தொகுதியை விட்டு நிரந்தரமாக வெளியேறிய இரண்டு தூமகேதுக்களை ஆய்வு செய்துள்ளனர். அதிலிருந்து தெரியவருவது என்னவென்றால், இந்த இரண்டு தூமகேதுக்களும் நமது சூரியத் தொகுதியை பிறப்பிடமாகக் கொண்டவையல்ல. மாறாக இவை வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து வந்திருக்கவேண்டும் என்பதாகும்.
இது உண்மையானால், இந்த இரண்டு தூமகேதுக்களும் அவற்றின் பயணப்பாதையில் சூரியத் தொகுதியை அதிர்ஷ்டவசமாக கடந்திருக்கவேண்டும்.
கடந்த சில வருடங்களாகத்தான் நாம் சூரியத் தொகுதிக்கு வெளியே இருந்து வரும் தூமகேதுக்கள் மற்றும் விண்கற்கள் பற்றி ஆய்வுகளை செய்கின்றோம்.
இந்த இரண்டு தூமகேதுக்களும் மீண்டும் எம்மை எப்போது சந்திக்கும் என்று யாருக்குத் தெரியும்!
படவுதவி: NAOJ
ஆர்வக்குறிப்பு
சூரியத் தொகுதியில் பில்லியனுக்கும் அதிகமான தூமகேதுக்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவை சூரியனுக்கு அருகில் வரும் போது, சூரிய வெப்பத்தால் உருகி வாயு மற்றும் தூசுகளை வெளியிடும். இது வால் போன்ற அமைப்பாக உருவாகும். இப்படியான கட்டமைப்பு பெருபாலான கோள்களை விடப் பெரியது.
Share: