ஒரு வண்ணத்துப்பூச்சி உருமாற்றம் அடையும் போது அது பல்வேறு கட்டங்களில் நிகழும். முட்டையில் தொடங்கி கம்பளிப்புழுவாய் மாறி பின்னர் கூட்டுப்புழுவாகி கடைசியில் அழகிய வண்ணத்துப்பூச்சியாக உருப்பெறும்.
இப்படியான ஒரு உருமாற்றத்தை விண்ணியலாளர்கள் பிரபஞ்ச அளவில் அவதானித்துள்ளனர். இந்தப் படத்தில் நீங்கள் பார்ப்பது மிகப்பழைய விண்மீன் ஒன்று அதனைச் சுற்றியிருக்கிற பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்த தொடங்கிய தருணம்.
நமது சூரியனைப் போன்ற விண்மீன்கள் தங்கள் வாழ்வுக்காலத்தின் இறுதியில் அளவில் பெருத்து ‘சிவப்பு அரக்கன்’ எனும் வகையான விண்மீனாக மாறும். இறுதியில் கடைசி மூச்சாக அதன் வெளிப்புற வாயுப் படலத்தை விண்வெளியில் விசிறியெறிந்து அந்த வாயுக்கள் அழகான ‘கோள் நெபுலா’ என அழைக்கப்படும் பிரபஞ்சக் கட்டமைப்பாக உருமாறும். கோள் நெபுலாக்களின் வடிவம் அதன் தாய் விண்மீன் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை கொண்டே அமையும். அதாவது அந்த விண்மீனைச் சுற்றி வரும் கோள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்கு அருகில் இருக்கும் விண்மீன்கள் கோள் நெபுலாவின் வடிவில் செய்வாக்குச் செலுத்தும்.
படத்தில் விண்மீன் மிகவேகமாக ஜெட் போன்ற அமைப்பில் வாயுக்களை இருபுறமும் வீசுகிறது. அந்த வேகமான வாயுத் தாரகை அருகில் உள்ள தூசு மற்றும் வாயுக்களில் மோதுவதால் இப்படி அழகான ஒரு அமைப்பை எம்மால் பார்க்கக்கூடியவாறு இருக்கிறது.
அழகான வண்ணத்துப்பூச்சிகள் போலவே கோள் நெபுலாக்களும் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் இருக்கின்றன. சில வட்ட வடிவில் இருந்தாலும் பல விசித்திரமான வடிவங்களில் அமைந்துள்ளன. சில வண்ணத்துப்பூச்சி வடிவிலும் உள்ளன!
படவுதவி: ALMA (ESO/NAOJ/NRAO), Tafoya et al.
ஆர்வக்குறிப்பு
கோள் நெபுலாவின் பெயரிற்கும் கோள்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. எனவே இந்தப் பெயரின் காரணம் என்ன? நெபுலா என்றால் முகில் என்று பழைய லத்தீன் மொழியில் அர்த்தம். முதன்முதலில் இந்த விண்வெளிக் கட்டமைப்பு தொலைநோக்கி மூலம் அவதானிக்கப்பட்டபோது விண்ணியலாளர்கள் இவை யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்கள் எப்படி சிறு தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கப்பட்ட போது தெரிந்தனவோ அப்படியே இருந்ததால் இந்தப் பெயரை வைத்தனர். பின்னர் இந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
Share: