பூமியில் ஏற்படும் விபரீதமான காலநிலை மாற்றங்கள் போலவே விண்மீன்களிலும் காலநிலை மாற்றங்கள் இடம்பெறுகின்றன. இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் சில கட்டமைப்புகளில் இடம்பெறும் நிகழ்வுகள் கற்பனை செய்துகூட பார்க்கமுடியாதளவு கடுமையானவை. ஐரோப்பிய தெற்கு அவதானிப்பகத்தின் தொலைநோக்கியை பயன்படுத்தி விண்ணியலாளர்கள் சிறிய விண்மீன்கள் கொத்து ஒன்றில் இடம்பெறும் விசித்திரமான நிகழ்வுகளை அவதானித்துள்ளனர்.
ஒரு விசேடவகையான விண்மீன்
இந்த விண்ணியலாளர்கள் ஒரு புதிய வகையான விண்மீனைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினர். இவை extreme horizontal branch stars என அழைக்கப்படுகின்றன. இந்த விண்மீன்கள் நமது சூரியனில் பாதியளவே, ஆனால் சூரியனைப் போல ஐந்து மடங்கு வெப்பமானது. இவற்றின் சிறியளவு காரணமாக இவை பெரும்பாலும் அவதானிப்புகளுக்கு புலப்படாமல் மறைவாகவே இருக்கின்றன.
புதிய ஆய்வு முடிவுகள் இந்த விண்மீன்களுக்கு இரண்டு முக்கிய விசேட பண்புகள் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கின்றன.
பெரும் புள்ளிகள்
முதலாவதாக இந்த விண்மீன்கள் பெரும் காந்தப் புள்ளிகளை கொண்டுள்ளன. இந்தப் பிரதேசங்களே அதிகளவான காந்தபுல செயற்பாடு அதிகமாக காணப்படும் பிரதேசமாகும். இந்தப் பிரதேசங்கள் ஏனைய பகுதிகளைவிட வெப்பமானதும், பிரகாசமானதுமாகும். இந்தப் புள்ளிப் பிரதேசங்கள் மிகப்பெரியவை. அண்ணளவாக விண்மீனின் நான்கில் ஒரு பங்கு பகுதியை இந்தப் புள்ளிகள் மூடியிருக்கின்றன.
இவை நமது சூரியனில் தோன்றும் புள்ளிகளை விட மாற்றுபட்டவை. சூரியனில் தோன்றும் புள்ளிகள் அளவில் சிறிதாகவும், அதனைச் சுற்றியிருக்கும் பகுதியைவிட குளிராகவும் காணப்படும்.
மேலும் இந்த விண்மீன்களில் தோன்றும் இந்த புள்ளிகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கின்றன. அதாவது பல தசாப்தங்களுக்கு. ஆனால் சூரியனில் தோன்றும் புள்ளிகள் சில நாட்கள் தொடக்கம் மாதங்கள் வரையே காணப்படும்.
இந்த வெப்பமான விண்மீன்கள் சுழல்வதால் பெரும் புள்ளிகள் மறைந்து மறைந்து தென்படுகின்றன. இது விண்மீனின் பிரகாசத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த விண்மீன்களை விஞ்ஞானிகளால் அவதானித்து அதனை ஆய்வு செய்யக்கூடியவாறு இருக்கிறது.
அளவுக்கதிகமான சக்தி
இந்தச் சிறிய விண்மீன்கள் பெரும் புள்ளிகளை கொண்டிருப்பது மட்டுமல்லாது, இவற்றில் சில விண்மீன்களில் பெரும் பட்டொளி (superflare) நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. இந்த வெடிப்புகளில் வெளிவரும் சக்தி சூரியனில் இடம்பெறும் ஒத்த நிகழ்வுகளுடன் ஒப்பிடும் போது பல மில்லியன் மடங்கு அதிகமாகும்.
படவுதவி: ESO/L. Calçada, INAF-Padua/S. Zaggia
ஆர்வக்குறிப்பு
நமது பால்வீதியில் இருக்கும் விண்மீன் கொத்துக்கள் எவ்வளவு வயதானவை என்று எம்மால் எளிதாக கூறிவிடமுடியும். மிக வயதான கொத்துக்கள் பால்வீதியின் மையத்தில் இருந்து தொலைவிலும் புத்யவை மையத்திற்கு அருகிலும் காணப்படுகிறன.
Share: