அண்ணளவாக 13 வருடங்களாக சனியை சுற்றிவந்த காசினி-ஹுய்ஜென்ஸ் திட்டம் நிறைவுக்கு வருகிறது.
காசினி விண்கலம் 1997 இல் பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. ஏழு வருடங்களாக சூரியத் தொகுதியில் பயணித்து சனியை அடைந்தது காசினி.
அதன் பிறகு சிலமாதங்களின் பின்னர் காசினி “தாய் விண்கலம்”, ஹுய்ஜென்ஸ் (Huygens) எனும் ஆய்வுக்கலத்தை சனியின் மர்மம் நிறைந்த துணைக்கோளான டைட்டானை நோக்கி ஏவியது. வெளிப்புற சூரியத்தொகுதியில் முதன்முதல் தரையிறக்கப்பட்ட நிகழ்வு இதுவாகும்!
டைட்டான் துணைக்கோளை ஆய்வுசெய்த ஹுய்ஜென்ஸ் ஆய்வுக்கலம் பூமிக்கும் டைட்டானுக்கும் நிறைய விடயங்களில் ஒற்றுமை இருப்பத்தை கண்டறிந்தது. அதற்கு அடர்த்தியான வளிமண்டலம் உண்டு, மேலும் காலநிலை (டைட்டானில் மீதேன் எனும் இரசாயனமே மழையாக பொழிகிறது) மற்றும் ஏரிகளும் (மீதேனால் ஆக்கப்பட்ட) அங்கு காணப்படுகின்றன. ஆனாலும், டைட்டான் பூமியைவிட மிகவும் குளிரானது. அதனது மேற்பரப்பு வெப்பநிலையான -180 பாகை செல்சியஸ் பூமியின் தென்துருவத்தைவிட இருமடங்கு குளிரானது.
ஹுய்ஜென்ஸ் ஆய்வுக்கலத்தை டைட்டானில் இறக்கியபின்னர் காசினி விண்கலம் சனியைப் பற்றியும், அதனது வளையங்கள் மற்றும் ஏனைய துணைக்கோள் குடும்பத்தையும் ஆய்வுசெய்தது. காசினி சனியின் இன்னொரு துணைக்கோளின் மேற்பரப்பில் இருந்து நீர் பீச்சியடிப்பதை அவதானித்தது, மேலும் அந்தக் கோளின் மேற்பரப்பிற்கு கீழே ஏலியன் உயிரினம் வாழக்கூடிய காலநிலையைக்கொண்ட சமுத்திரம் ஒன்று ஒழிந்திருப்பதையும் இது கண்டறிந்தது.
பலவருட கடினஉழைப்பிற்குப் பின்னர் காசினி விண்கலத்தின் எரிபொருள் முடியப்போகிறது. விஞ்ஞானிகள் கசினி விண்கலத்தை செப்டெம்பர் 15 இல் சனியுடன் மோதி இறுதியாக இந்தத்திட்டத்தை முடிக்க எண்ணியுள்ளனர். இதற்குக் காரணம் காசினி விண்கலம் எதிர்காலத்தில் தவறுதலாக சனியின் துணைக்கோள்கள் ஏதாவது ஒன்றுடன் மோதுவதை தவிர்க்கவே.
அதுவரை காசினி விண்கலம் தனது கடைசி மாதங்களில் சனிக்கும் அதனது வளையங்களுக்கும் இடையில் பலமுறை சுற்றிவரும், இந்தப்பிரதேசம் இதுவரை ஆராயப்படாத பிரதேசமாகும்.
சனிக்கும் அதன் முகில்களுக்கும் மிக அருகில் இருக்கும் வளையங்களை துல்லியமாக காசினி படம்பிடிக்கும். மேலும் சனியின் ஈர்புவிசையையும் அளக்கும், இதன் மூலம் விஞ்ஞானிகளால் சனியின் உட்புறக்கட்டமைப்பு எப்படியிருக்கும் என்று கண்டறியமுடியும்.
ஆக, காசினியின் இறுதிக்காலத்திலும் சனியைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள உதவுகிறது.
ஆர்வக்குறிப்பு
சனி ஒரு வாயு அரக்கன் வகை கோள், அதாவது சனிக்கு திண்மமான மேற்பரப்பு இல்லை. காசினி சனியின் வளிமண்டலத்தினுள் கொஞ்சம் கொஞ்சமாக புதையும். புதையும் அளவு அதிகரிக்க காசினி அதிகளவு வெப்பம் மற்றும் அழுத்தத்தை உணரும், அப்படியே ஒரு கட்டத்தில் நொறுக்கப்பட்டு எரிந்து சாம்பலாகிவிடும்.
Share: