நீங்கள் தற்போது இருக்கும் அறையை பாருங்கள். அதில் பல வேறுபட்ட நிறங்களிலும், மூலப்பொருட்களாலும் உருவான பொருட்கள் இருக்கும். ஆனாலும், இவை அனைத்துமே அணுக்கள் எனும் ஒரே அடிப்படைக் கட்டமைப்பால் உருவானவைதான். அணுக்களிலும் பலவகை உண்டு அவற்றை நாம் மூலகங்கள் என அழைக்கிறோம். இவற்றில் சில மூலகங்கள் மற்றையவற்றை விட அதிக அணுத்துணிக்கைகளை கொண்டிருப்பதுடன் பிரபஞ்சத்தின் மிகச் சக்திவாய்ந்த வெடிப்பில் உருவாகின்றன.
உங்களுக்கு ஏற்கனவே தங்கம், ஆக்ஸிஜன், செப்பு என்று சில பல மூலகங்களின் பெயர்கள் தெரிந்திருக்கும். பெரும்பாலான மூலகங்கள் விண்மீனின் உள்ளேதான் உருவாகின்றன. விண்மீன்கள் வாழ்வுக்காலத்தை முடித்து வெடிக்கும் போது இவை விண்வெளியில் சிதறடிக்கப்படுகின்றன. புதிய விண்மீன்கள் இந்த மூலகங்களை கொண்டு மீண்டும் உருவாகும். ஒவ்வொரு புதிய பரம்பரை விண்மீன்கள் உருவாகும் போதும் அதிகளவில் இப்படியான மூலகங்கள் கிடைக்கும்.
இரண்டு நியூட்ரோன் விண்மீன்கள் மோதிய போது உருவான மிகப் பாரமான மூலகத்தை விண்ணியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். நியூட்ரோன் விண்மீன்கள் எனப்படுவது ஒரு பெரிய விண்மீன் தனது வாழ்வுக் காலத்தை முடித்துவிட்டு வெடித்துச் சிதறிய பின்னர் எஞ்சியிருக்கும் மிக மிக அடர்த்தியான விண்மீனின் மையப்பகுதியாகும்.
ஒரு மூலகத்தை பாரமானது எனக் கூறுவது என்பது அந்த மூலகத்தில் அதிக எண்ணிக்கையில் புரோத்திரன்கள் இருக்கிறது என்று அர்த்தம். புரோத்திரன்கள் என்பது அணுவை உருவாக்கியிருக்கும் கட்டமைப்பின் ஒரு அம்சமாகும். விண்வெளியில் தற்போது கண்டறியப்பட்ட பாரமான மூலகம் ஸ்ட்ரோண்டியம் ஆகும். இதனை பூமியில் நாம் வானவேடிக்கைகளை உருவாக்க பயன்படுத்துகிறோம்.
இந்தப் புதிய கண்டுபிடிப்பு எமக்கு சொல்வது என்னவென்றால் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கும் பாரமான மூலகங்கள் பிரபஞ்சத்தின் மூர்க்கமான வெடிப்புகளில் இருந்து உருவாகும் என்பதுதான்.
ஆர்வக்குறிப்பு
மொத்தமாக 118 மூலகங்களே இருக்கின்றன. அப்படியென்றால், உங்கள் அறையில் இருப்பது, பூமியில் நாம் பார்க்கக்கூடியது எல்லாமே இந்த 118 மூலகங்களில் இருந்துதான் உருவாகியிருக்கும். பூமியில் என்று மட்டுமல்ல, விண்வெளியில் இதே நிலைதான். 118 ஐயும் தாண்டி சில மூலகங்களை இருக்கலாம், ஆனால் 118 ஐ மட்டுமே கண்டறிந்துள்ளோம்.
Share: